வ
ளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழிக்கத் தொடங்கியதன் விளைவாக இன்று மனிதச் சமூகம் சுனாமி, புவி வெப்பமடைதல், ஓசோன் படலத்தில் ஓட்டை எனப் பல பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் சாலையில் உள்ள ஆர்.கே.ஆர். கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் க. திருவருள்செல்வன், வாகனங்கள் வெளியேற்றும் புகையால் காற்று மாசடைவதைக் குறைக்க மிகக் குறைந்த செலவிலான எளிய தீர்வை கண்டறிந்துள்ளார்.
உதவும் சோற்றுக் கற்றாழை
அவரது புதிய கண்டுபிடிப்பு, அக்டோபர் 11,12,13-ம் தேதி கரூரில் நடந்த அறிவியல் கண்காட்சியில் காட்சிக்குவைக்கப்பட்டு, போட்டியில் முதல் பரிசும் பெற்றது. அடுத்தகட்டமாக, தென்னிந்திய அளவிலான போட்டியில் பங்கேற்கவும் திருவருள்செவ்லன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் ஏற்கெனவே நீர் மேலாண்மைக்கு உதவும் வகையில் குறுஞ்செயலி ஒன்றை உருவாக்கி உள்ளார்.
“தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகையினால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க ஒரு மாத உழைப்பில் இரு சக்கர வாகனத்தில் பொருத்தப்படும் புதிய புகைப்போக்கியை உருவாக்கி உள்ளேன். சோற்றுக் கற்றாழையை மூலப்பொருளாகக் கொண்டு, நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளின் உதவியுடன் ‘சிலிண்டரை’ வடிவமைத்துள்ளேன். இதன் மூலம் ஒரு முனையில் புகையை உள்வாங்கும் இக்கருவி அதில் உள்ள மாசினைக் குறைத்து வெளியே அனுப்பும்.
இவ்வாறாக 50 சதவீதம்வரை மாசுவைக் குறைக்கிறது. இதே தொழில்நுட்பத்தை மேம்படுத்தினால் 90 சதம்வரை மாசுவைக் குறைக்கலாம். தற்போது கண்டுபிடிக்கப்பட்ட கருவிக்கு ரூ.1800வரை செலவானது. இதை டி.வி.எஸ். 50 மோட்டர் சைக்கிளில் பொருத்திப் பரிசோதனை செய்து காண்பித்துள்ளேன். அதிக சி.சி. திறனுடைய மோட்டார் சைக்கிள்களிலும் இதைப் பொருத்தலாம். ஆனால், அதற்குச் சற்றுக் கூடுதல் செலவாகும்” என்கிறார் திருவருள்செல்வன்.
No comments:
Post a Comment