ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்கவேண்டிய 15 ஆரோக்கியப் பழக்கங்கள்!

ஓர் ஆணிடம், `வேலை எப்படி போய்க்கிட்டு இருக்கு?’ என்று கேட்டுப் பாருங்கள். `எட்டு மணி நேர வேலைதான். ஆனா முடியலை... தாவு தீர்ந்துபோயிடுது’ என்று வருகிற பதில் இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் அல்ல இன்றைக்கு அரசுத் துறையில் வேலை பார்க்கிறவர்களுக்கே பணிச்சுமை அதிகமாகத்தான் இருக்கிறது. அது இருக்கட்டும்... உண்மையில், ஆணைவிட, பெண்ணுக்கே வேலைப்பளு மிக அதிகம். அவர்கள் ஆண்களைவிட அதிக நேரம் உழைக்கவேண்டியிருக்கிறது. பணிக்குச் செல்லும் பெண்களாக இருந்தால், வீட்டு வேலையையும் சேர்த்து இரட்டைச் சுமை. அதிகாலை நான்கு அல்லது ஐந்து மணிக்குத் தொடங்கும் அவர்களுக்கான வேலை, இரவு 10 மணிக்குள் முடிவதே பெரும்பாடு. இன்றைய தறிகெட்டு ஓடும் வாழ்க்கைச் சூழலில் இது தவிர்க்க முடியாதது. எனவே, பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் தங்கள் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவேண்டியது காலத்தின் தேவை. 
பெண்கள் கடைப்பிடிக்கவேண்டிய 15 ஆரோக்கியப் பழக்கங்கள்...   
சொந்தக்காலில் நில்லுங்கள்! 
மனதில் ஆழமாக நிறுத்திக்கொள்ளவேண்டிய வாசகம். இது சம்பாதிப்பது, தன் வருமானத்தில் வாழ்வது என்பதை மட்டும் குறிப்பதல்ல. எதற்கும் யாருடைய துணையையோ, உதவியையோ எதிர்பார்க்காமல் சுயமாகச் செயல்படுவதையும் குறிக்கும். அது, இரண்டாவது மாடி. 15 வயது மகள் மயக்கமடைந்து கீழே விழுந்துவிடுகிறாள். வீட்டில் அம்மா மட்டும்தான். உதவிக்கு அக்கம்பக்கத்தில் யாரும் இல்லை. அவளைத் தூக்கிக்கொண்டு ஓட உடம்பில் திராணி வேண்டும் அல்லவா? இது, மிகச் சாதாரண உதாரணம்தான். சங்கிலிப் பறிப்புச் சம்பவமோ, தனியாக வீட்டில் இருக்கும்போது எதிர்கொள்ளவேண்டிய வன்முறை நிகழ்வோ... அதை எதிர்கொள்ள மனதில் உறுதி வேண்டும். அதற்கு உடலில் வலு வேண்டும். தவறாத உடற்பயிற்சி பெண்ணுக்கு வலுவளிக்கும். உடற்பயிற்சி தரும் நன்மைகள் அளப்பரியவை. இதயநோய்க்கான அபாயத்தை வெகுவாகக் குறைக்கும்; நல்ல தூக்கம் கிடைக்கும்; நினைவாற்றலை அதிகரிக்கும்; தன்னம்பிக்கையை வளர்க்கும்.
ஒவ்வொரு நாளையும் ஃப்ரெஷ்ஷாகத் தொடங்குங்கள்! 
முதல் நாள் இரவு எப்படி முடிந்ததாகவும் இருக்கட்டும்; விடிகிற பொழுதை ஃபிரெஷ்ஷாகத் தொடங்குங்கள். இன்றும் இந்த உலகம் உங்களுக்காகவே புலர்ந்ததாக எண்ணிக்கொள்ளுங்கள். அழகான காலை, உடல் வருடும் தென்றல், மலரும் பூக்கள், குழந்தையின் சிரிப்பு... என உங்களுக்குப் பிடித்த ஏதாவதொன்றை ரசித்து அனுபவியுங்கள். புத்துணர்வோடு ஒரு காலையைத் தொடங்குவது நம் உடலுக்கும் மனதுக்கும் மிக நல்லது. சின்னதாக ஒரு யோகா, நடைப்பயிற்சி, பிராணாயாமம் செய்வதெல்லாம் அன்றைய நாள் முழுக்க உங்களைப் ஃபிரெஷ்ஷாக வைத்திருக்கும். பணியிலும் வீட்டிலும் எந்தப் பிரச்னை வந்தாலும், நிதானமாக முடிவெடுக்க வழிவகுக்கும். அதிகாலைக் காற்றை சுவாசிப்பதில் கிடைக்கும் பலன்கள்... ஜீரண சக்தியை மேம்படுத்தும்; ரத்த அழுத்தத்தையும் இதயத் துடிப்பையும் சீராக வைத்திருக்கும்; நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்; மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
உடல் சொல்வதைக் கவனியுங்கள்!  
உடல் நம்மோடு நிகழ்த்தும் உரையாடலை பெரும்பாலானோர் புறக்கணிப்பதுதான் பல பிரச்னைகளுக்கு மூல காரணம். வயிற்றைக் கிள்ளுகிற பசி உணர்வுகூட உடல் நம்மோடு நிகழ்த்தும் ஓர் உரையாடல்தான். வேலைக்குக் கிளம்பும் அவசரத்தில் அதற்குக் காதுகொடுக்காமல்விடுவது அசிடிட்டி பிரச்னையை ஏற்படுத்தும்; நேரம் கழித்துச் சாப்பிடும்போது இறங்காது; மதிய உணவுகூட முழுமை பெறாது. இது தொடர்ந்தால் பல வயிற்று உபாதைகளைச் சம்பாதிக்கவேண்டியிருக்கும். இப்படிச் சின்னதாக ஏற்படும் தலைவலி, இடுப்புவலி, கால்வலி எதுவாக இருந்தாலும் உடல் நமக்கு ஏதோ பிரச்னை என்று சொல்லும் சமிக்ஞை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உடனே அதற்கு தீர்வு காணுங்கள். உடனே கவனிக்காவிட்டால், பிரச்னை பெரிதாகக்கூட வாய்ப்பு இருக்கிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.   
நண்பர்களோடு இருக்கும்போது போன் வேண்டாமே!
அனைவருக்குமே இன்று இணைபிரியா துணையாகிவிட்டது மொபைல். அதில் இருந்து எழும் கதிர்வீச்சுக்கள் நம்மை பாதிப்பது ஒருபக்கம் இருக்கட்டும். தோழிகளிடமோ, நண்பர்களிடமோ உரையாடும்போதுகூட `ஒரு நிமிஷம்’ என்று சொல்லிவிட்டு யாரிடமோ பேசப் போவது சரியல்ல. சிலர் நண்பர்களிடம் உரையாடியபடியே செல்போனில் எதையோ நோண்டிக்கொண்டு இருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை இது இயல்பான ஒரு செயல். ஆனால், உடன் இருப்பவருக்கு தன்னைவிட செல்போன் முக்கியமோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்திவிடும். நம் மீதான அபிமானம் நண்பர்களுக்குக் குறைவது நமக்குத்தான் இழப்பு. நண்பர்களோடு இருக்கும்போது போன் வேண்டாமே! 
ஜில் ஸ்மூத்தீஸ் அதிகமாகக் குடியுங்கள்!  
உடல் உழைப்பு, மூளை உழைப்பு இரண்டுமே சீராக நடைபெற எனர்ஜி தேவை. காபி, டீ போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு ஸ்மூத்தீஸ் எடுத்துக்கொள்வது பெண்களுக்கு அதிக எனர்ஜி தரும். அதிலும் பழங்களால் தயாரான ஸ்மூத்தீஸ் மிக நல்லது. இதிலிருந்து நமக்குத் தேவையான வைட்டமின்களும் மினரல்களும் கிடைக்கும்; உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும். மிக முக்கியமாக, இவற்றைக் கடைகளில் வாங்கிச் சாப்பிடுவதைவிட, நாமே தயாரிப்பது சுகாதாரம், ஆரோக்கியம். 
துறுதுறுவென இருங்கள்! 
எப்போதும் துறுதுறுவென இருப்பது ஆரோக்கியமாக இருப்பவர்களால் மட்டுமே முடியும். மலர்ச்சியாக, துறுதுறுவென இருப்பவர்கள் பல பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம். குறிப்பாக, சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அனைத்தையும் கட்டுப்படுத்தும். எனவே, ஆரோக்கியத்தோடு, சுறுசுறுப்பாக இருப்பதையும் வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். 
உண்டி சுருங்குதல் தேவையில்லை... ஆனால், பசியில்லாத நேரத்திலும் சாப்பிடுதல் வேண்டாமே!
`பசித்துப் புசி’ என்பது மருத்துவ மொழி. இதைச் சட்டை செய்யாமல் இருப்பதுதான் பெண்களுக்கு ஏற்படும் பல பிரச்னைகளுக்குக் காரணம். காலை 11 மணி... பசியே இருக்காது. தோழிகள் கூப்பிடுகிறார்கள் என்பதற்காக கேன்டீனில் ஒரு சமோசாவோ, இரண்டு வடையையோ சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கான வழி அல்ல. அது மதிய உணவின் அளவைக் குறைக்கும்; உடல்பருமனுக்கு வழிவகுக்கும். தேவையில்லாத சோர்வையும் அயர்ச்சியையும் உடலுக்குத் தந்துவிடும். 
ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்! 
`இன்றைக்கு இலவசமாகக் கிடைப்பது அறிவுரை மட்டும்தான்’ என்று விளையாட்டாகச் சொல்வார்கள்; விமர்சனங்களும் அப்படித்தான். உண்மையில் நம்மை நோக்கி எறியப்படும் விமர்சனம் மிக அழுத்தமான காயங்களை ஏற்படுத்திவிடும் என்பதே உண்மை. பலருக்கு அது மனதைத் தளரச் செய்துவிடும். மனம் தளர்ந்தால், உடலும் ஒத்துழைக்காது. தனிப்பட்ட முறையில் நம்மைத் தாக்குவதுபோல் எழும் விமர்சனங்களை இடது கையால் ஓரங்கட்டுங்கள். உண்மையிலேயே, நமக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் வைக்கப்படுபவற்றுக்கு செவி கொடுங்கள். அது நம் வளர்ச்சிக்கு உதவும். `எல்லாத்தையும் சரியா செஞ்சுடுறீங்க... ஆனா, தினமும் லேட்டாத்தான் வரணுமா?’ என்கிற அதிகாரியின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்துதான் பாருங்களேன். உங்கள் மதிப்பும் தானாக உயரும். 
நீங்கள் விரும்பும் இடமாக வீட்டை மாற்றுங்கள்! 
நம் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வையும், மகிழ்ச்சியையும், நிறைவையும் தர நம் இல்லத்தால் மட்டுமே முடியும். அது, நாம் விரும்பக்கூடிய இடமாக இருக்கும்பட்சத்தில் எளிதாக சாத்தியமாகும். சுவர்களில் உங்களுக்குப் பிடித்த நிற வண்ணங்களை அடிப்பதும்கூட மகிழ்ச்சிக்கான ஒரு படிதான். உங்களுக்குப் பிடித்த வடிவமைப்பில் வரவேற்பறை, கச்சிதமான கிச்சன், காற்றோட்டமான ஹால், மொட்டை மாடியின் ஓரத்தில் செம்பருத்திச் செடி... என எதுவாகவும் இருக்கட்டும். இப்படி இருக்கவேண்டும் என நினைத்தால் அப்படியே மாற்றுங்கள். இல்லம் உணர்வு சார்ந்த ஒரு விஷயம். அது, உங்களை வீட்டாருடன் மேலும் நெருக்கம் கொள்ளச் செய்யும். மனதுக்கு இதமளிக்கும். மனச்சுமை, சோர்வைக் குறைக்க உதவும். 
உங்கள் எடைக்குத் தேவையான தண்ணீரை தினமும் அருந்துங்கள்!
பெண்களை நாள் முழுக்க ஆரோக்கியத்தோடு வைத்திருப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது தண்ணீர். ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது பொதுவாகச் சொல்லப்படும் ஒன்று. உடல் எடை, ஆரோக்கியத்துக்கு ஏற்ப, ஒவ்வொருவரும் இந்த அளவுக்குத் தண்ணீர் பருகலாம் என்பதை மருத்துவரால் மட்டுமே சொல்ல முடியும். அந்த அளவைத் தாண்டினாலோ, குறைத்தாலோ பிரச்னைதான். எனவே, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அவரவர் எடைக்கு ஏற்ப தண்ணீர் அருந்துவதை வழக்கப்படுத்திக்கொள்ளவும். 
எல்லாவற்றையும் படியுங்கள்..! உச்சரிக்க முடியாதவற்றை தவிர்த்துவிடுங்கள்! 
ஷாப்பிங் செய்யும் பெண்கள் செய்யும் தவறுகளில் முக்கியமானது, வாங்கும் பொருட்களின் லேபிளைப் படிக்காமல் இருப்பது. குறைந்தது வாங்கும் மருந்தோ, உணவுப் பொருளோ காலாவதியாகும் தேதியையாவது சரிபார்த்து வாங்க வேண்டும் என்பது பொதுவிதி. புரிகிறதோ, இல்லையோ பொருட்களின் லேபிளில் ஒட்டியிருக்கும் எல்லாவற்றையும் படித்துவிடுங்கள். உச்சரிக்கவே சிரமமாக இருப்பவற்றைத் தவிர்த்துவிடுங்கள். படிக்கப் படிக்க நாம் வாங்கும் பொருளில் என்ன இருக்கிறது என்பது மெள்ள மெள்ளப் புரிய ஆரம்பிக்கும். அதிகக் கொழுப்புள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்கலாம், நிறைய ஊட்டச்சத்துள்ள பொருட்களை வாங்கலாம்... அது, நம் ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவும்.  
 மனஅழுத்தம் வெற்றிபெற அனுமதிக்காதீர்கள்!  
எங்குதான் பிரச்னை இல்லை; யாருக்குத்தான் பிரச்னை இல்லை. வீடோ, பணியிடமோ நம்மை கைகூப்பி வரவேற்கக் காத்திருப்பவை அவை மட்டுமே. அதிக வேலை, சக ஊழியர்களின் முகச்சுளிப்பு, திரும்பத் திரும்ப ஒரே வேலையைச் செய்வதால் ஏற்படும் மனச்சலிப்பு (Monotonous)... எதுவாகவும் இருக்கட்டும். அது ஏற்படுத்தும் மனச் சோர்வு நம்மை மனஅழுத்தத்தின் பக்கம் திரும்பவிடாமல் பார்த்துக்கொள்ளவும். மனஅழுத்தம், நம் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் பாதித்துவிடும். அதிகமானால், மனநோய் வரை கொண்டுபோய்விட்டுவிடும். எனவே எப்போதும் `ரிலாக்ஸ்’ மூடிலேயே இருக்கப் பழகிக்கொள்ளுங்கள். `எதுவும் எனக்குப் பெரிதல்ல’ என்கிற மனோபாவம், மனஅழுத்தம் நம்மை நெருங்காமல் பார்த்துக்கொள்ளும். 
நிறைவாகச் சாப்பிடுங்கள்! 
காலை, மதியம், இரவு... எந்தப் பொழுதானாலும் அவசரம் இல்லாமல், நிதானமாக, நொறுங்கச் சாப்பிடுங்கள். உணவு, நமக்கு சக்தி தரும் ஒன்று என்பதை மறக்காதீர்கள். அது நமக்கு எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்து ஆரோக்கியமான, நம் உடல்வாகுக்கு ஏற்ற உணவுகளைத் தேர்ந்தெடுத்து ரசித்து, திருப்தியாகச் சாப்பிடுங்கள். உணவில் கிடைக்கும் திருப்தி, மனதுக்கும் கிடைக்கும். துள்ளலோடு உங்களைச் செயல்பட வைக்கும்.    
நிறையச் சிரியுங்கள், அது மற்றவரையும் தொற்றிக்கொள்ளும்! 
சிரிப்புதான் மனிதர்களின் மிக முக்கியமான அடையாளம். எதிரே உங்கள் தோழி வருகிறார். நீங்கள் புன்னகைத்தால் அவரால் பதிலுக்குச் சிரிக்காமல் உங்களைக் கடக்க முடியாது. எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பது, உங்களை மற்றவர்களிடம் நெருங்கவைக்கும். நிறையச் சிரிப்பது பல நோய்களை ஓரங்கட்டும். ஆரோக்கியத்துக்கு நல்லது. முக்கியமாக மனப் பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வாக அமையும். உங்கள் சிரிப்பு உங்கள் அருகில் இருப்பவர்களையும் தொற்றிக்கொள்ளும். 
நன்றாக உறங்குங்கள்! 
ஏழு முதல் எட்டு மணி நேர உறக்கம் எல்லோருக்கும் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். நாள் முழுக்க உழைத்த உடலுக்கு ஓய்வு தருவது உறக்கமே. நல்ல ஆழ்ந்த உறக்கம், அடுத்த நாள் பொழுதை உற்சாகத்தோடு ஆரம்பிக்க உங்களுக்கு உதவும். அன்றைக்கு முழுக்க சக்தி குறையாமல் செயல்படவைக்கும். நல்ல உறக்கம், உயர் ரத்த அழுத்தம், இதயநோய்கள் ஆகியவற்றைச் சற்று ஓரமாகத் தள்ளிவைக்கும் மருந்து என்பதை மறக்காதீர்கள்! 
எல்லாப் பெண்களுமே அவசியம் கடைப்பிடிக்கவேண்டிய 15 பழக்கங்கள் இவை. கடைப்பிடித்துப் பாருங்கள்... வாழ்க்கை ரசனையாகவும் ஆரோக்கியச்செறிவோடும் இருக்கும்.

No comments:

Post a Comment