’அனிதா தற்கொலை... கந்துவட்டித் தீக்குளிப்பு... ‘மெர்சல்’ பஞ்சாயத்து.... இந்தப் பாவமெல்லாம் சும்மாவிடாது..!’’ - சீறும் சமுத்திரக்கனி


நிமிடத்துக்கு நிமிடம் ப்ரேக்கிங் நியூஸ் நம்மை அதிர வைத்துக்கொண்டிருக்கிறது. நீட், அனிதா, கந்துவட்டி என தினமும் ஏதாவது ஒன்று நம்மை பாதிக்கத்தான் செய்கிறது. இப்படியான ப்ரேக்கிங் நியூஸ் ஒரு பக்கம் என்றால், அ.தி.மு.க பல அணிகளாகப் பிரிந்து கிடக்கும் இந்த நேரத்தில் ரஜினி, கமல், விஜய் என முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு என்ட்ரி கொடுக்கும் வேலைகள் ஒரு பக்கம். இந்தச் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள் என இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனியிடம் கேட்டோம்.
’’நல்லது செய்யணும்னு நினைக்கிற யார்வேணாலும் அரசியலுக்கு வரலாம். அதுக்கு எல்லாருக்கும் முழு உரிமை இருக்கு. அவங்க வந்து என்ன செய்றாங்க என்பதை வச்சுத்தான் யார் பின்னாடி போலாம்னு முடிவு பண்ண முடியும். இந்த தேசத்துக்கு நல்லது செய்யணும்னு மனசார நினைச்சா, வந்து செய்யுங்க. ஏற்கெனவே மக்கள் ஏமாந்து, ஏமாந்து வருத்தத்தின் உச்சத்துல இருக்காங்க. யாராவது வந்து நல்லது செய்ய மாட்டாங்களானு நினைச்சிட்டு இருக்காங்க. அப்படி நல்லது செய்யணும்னு நினைக்கிறவங்க வாங்க’’.
மெர்சல் படத்துக்கு எதிரான அடக்குமுறையை எப்படிப் பாக்கறீங்க..?
’’எல்லா கலைஞர்களுக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கணும். அதிகார மையங்கள் அடக்குமுறையைக் கொண்டுவரணும்னு நினைக்கிறது எல்லாம் ரொம்பத் தப்பு. அதுவும் அவர் பெயரை ஜோசப் விஜய்னு சொன்னதுலாம் ரொம்பவே தப்பு. எந்த மாதிரியான கலவரத்தை இங்கு கொண்டுவர நினைக்கிறாங்கனு தெரியல. ஆனா, அதுக்கு மொத்த திரையுலகமும் கைகோத்து நின்று, அந்தப் பிரச்னையை நம்ம பிரச்னையா பார்த்து அதுக்கு ஒரு முற்றுபுள்ளி வெச்சிருக்காங்க. ரொம்ப நல்ல விஷயம் இது. இது ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி.’’
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து துக்க சம்பவங்கள் நடக்குறதை பார்க்கும்போது எப்படி இருக்கு..?
‘’காக்க வேண்டியவர்கள் காக்கணும். அவங்களுக்கு வேற வேற பிரச்னைகள் இருக்கு. அது பின்னாடி ஓடிட்டு இருக்காங்க. அரசு நினைத்தால் காக்கலாம். மக்களோட பிரச்னைகளைக் கேட்கவே இங்கு ஆள் இல்லையே. அதுனாலதான் ஒன்றரை வயது குழந்தையோடு இசக்கி முத்து குடும்பமே தீக்குளிச்சும், மருத்துவப்படிப்புக்குச் சீட்டு கிடைக்காம அனிதாவும் இறந்து போனாங்க. அந்தப் பாவம் எல்லாம் சும்மா விடாது. அதுக்கு யாரெல்லாம் காரணமோ, யாரெல்லாம் துணை நின்னாங்களோ அவங்க எல்லாரும் இதுக்குப் பதில் சொல்லித்தான் ஆகணும்.
கூடங்குளம், கச்சத்தீவு, மீத்தேன், சாதிச் சண்டை, ஆணவக்கொலை, சின்னத்துக்குச் சண்டைனு சம்பவங்கள் போயிட்டே இருக்கு. என்ன நடக்குது நாட்டுல..!! இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க... உங்க எண்ணங்களையும் சொல்லுங்களேன்.. நான் தெரிஞ்சுக்க விரும்புறேன்!’’

No comments:

Post a Comment