பாலியல் புகார் கூறிய பாடகி சின்மயிக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பின. இந்த பிரச்சினை சமூக வலைத்தளங்களில் விவாதமாகவும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் நடிகை குஷ்பு சமீபத்தில் தனியார் டெலிவிஷன் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோது சின்மயி புகார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXXZ2yVV4D5wPRhPUqifPEpZ8d_UCl62KL5Usn0HFmgqGc1Wo0OHw-QZzuwKJVI6-nEIAJg-lfWdWdJyiAiS_tnYQAJeQwgmFwoRxNyJ1EhakytnZc1VLN9nCa6FkJ33DBY2W5HDIyK_pz/s400/Kushpu+and+chinmai.gif)
அதற்கு பதில் அளித்த குஷ்பு, ‘‘இந்த பிரச்சினை குறித்து சின்மயி பாடகர் சங்கத்தில் ஏன் புகார் அளிக்கவில்லை. எனது வாழ்க்கையில் நான் பார்த்தவர்களில் வைரமுத்து கண்ணியமான மனிதர்களில் ஒருவர்’’ என்று கூறினார். இது சின்மயிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ‘‘நான் என்ன செய்ய வேண்டும். எப்போது பேசி இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கேள்வியாக இருக்கிறது. ஆதாரப்பூர்வமாக 3 பெண்கள் பத்திரிகையாளர்கள் முன்பு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை அடையாளப்படுத்தி இருக்கிறோம். அதற்கு என்ன செய்யப்போகிறீர்கள்’’ என்றார்.
இதற்கு டுவிட்டரில் பதில் அளித்த குஷ்பு, ‘‘நான் எப்போதும் உங்களை ஆதரிக்கிறேன். ஆனால் எனது நியாயமான கேள்விகள் அப்படியேதான் இருக்கின்றன’’ என்றார். இதற்கு பதில் அளித்து சின்மயி கூறியதாவது:–
‘‘சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் 15–க்கும் மேற்பட்ட புகார்கள் நீதிமன்றத்தில் உள்ளன. புகார் கொடுத்த ஒரு பெண் டப்பிங் கலைஞரை சங்கத்தில் இருந்து நீக்கி விட்டனர். அந்த பெண்ணுக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. எப்போதோ நான் பேசி இருக்க வேண்டும் என்றெல்லாம் பேசாமல் இப்போது நான் பேசி இருப்பதை கவனியுங்கள். அன்பார்ந்த சமூகமே குற்றவாளிகளை பாதுகாப்பதை நிறுத்துங்கள்.’’
இவ்வாறு சின்மயி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment